காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம்
பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம்
சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.
“இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக்
கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம்” என்கிறார் லாவண்ய சோபனா
திருநாவுக்கரசு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரா.
திருநாவுக்கரசின் மனைவி.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பெண்களுக்கு ஏற்படும்
மன அழுத்தம்’ குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறார்.
கழிப்பறை ஆரோக்கியம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:
ஆதிகாலம் முதல்
“உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய
முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position).
ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும்
முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது. இதற்கு மலாசனம் என்று பெயர். நமக்குத்
தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது. இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த
அளவுக்கு உடல் உறுதி கூடும்.
இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும்; மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத்
தீர்வு கிடைக்கும். கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள்
திறம்பட வேலை செய்யும். உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்த முறைதான்
பின்பற்றப்படுகிறது.
எப்போது வந்தது?
19-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான், நாற்காலியில் உட்காருவது
போன்ற கழிப்பறைகள் மேற்கத்திய நாடுகளில் பரவ ஆரம்பித்தன. உடல்நலக் குறைபாடு
உடையவர்களுக்காக இவை உருவாக்கப்பட்டன. ராஜவம்சத்தினரும் மேல்தட்டு
மக்களும், இதை வசதியான முறையாகக் கருதினார்கள். இங்கிலாந்து போன்ற
நாடுகளில் இது பரவலானது. பிரிட்டன் மகாராணி விக்டோரியா தங்கத்தால் ஆன
மேற்கத்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இன்றைக்கு நகர்ப்புறங்களில் மேற்கத்திய முறை கழிப்பறைகள் பரவலாகிவிட்டன.
இந்த முறையால் உடல் கழிவு வெளியேற்றம் கடினமாகிறது. உடலில் இருந்து கழிவு
முழுமையாக வெளியேறுவதும் இல்லை. இந்திய முறை கழிப்பறையில் அமரும்போது,
இயற்கை அழுத்தத்தால் கழிவு முழுமையாக வெளியேற்றப்படுகிறது. ஈரானைச் சேர்ந்த
ரேடியாலஜி மருத்துவர் ராத் சயீத் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
நோய்களின் மூலகாரணி
முழுமையாக வெளியேற்றப்படாத கழிவு பெருங்குடல் பகுதியில் தேங்குவதால், அங்கு
நோய்த் தொற்று ஏற்பட்டு அப்பெண்டிசிட்டிஸ், இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ்
மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குக் காரணமாக
அமைகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்கள் அதிக அளவில் உள்ளன.
பாரம்பரியக் கழிப்பறை முறையைப் பயன்படுத்தும் தென் ஆப்பிரிக்காவின்
சுற்றுப் பகுதிகளில் இந்த நோய்கள் அரிதாக இருப்பதாகவும் இஸ்ரேல் மருத்துவ
இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியக் கழிப்பறை சிறப்பு
மேற்கத்திய நாடுகளில் சுத்தம் மேலோங்கி இருக்கும். ஆனால் உடல் சார்ந்த
தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான
நோய்களுக்குக் காரணம். ஆராய்ச்சியாளர்கள் பலரும், தங்கள் ஆய்வு முடிவாக
இந்திய முறை கழிப்பறையே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில்,
மேற்கத்திய முறை கழிப்பறை நம்மிடையே பரவலாகி வருகிறது.
சுகப்பிரசவத்துக்கு
கருவுற்ற பெண்கள் இந்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தினால் கருப்பையின்
அழுத்தம் குறைந்து, சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும். நோய்த்தொற்றுகளும்
குறைவாக இருக்கும். பொது இடங்களில்கூட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தவை.
இன்றைக்கு, எல்லாப் பக்கமுமே மேற்கத்திய முறை கழிப்பறை பரவலாகிவருவது
வருத்தம் தருகிறது.
ஆரோக்கிய அடையாளம்
இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன, அநாகரிகமாகவும்
கருதப்படுகின்றன. உண்மையில் இந்திய முறை கழிப்பறைகள் ஆரோக்கியத்தின்
அடையாளம். உண்பது, செரிப்பது, கழிவை முழுமையாக வெளியேற்றுவதில்தான், மனித
உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது.
அதனால் சொகுசு, நாகரிகம் என்று தவறாக நம்பி நம் குழந்தைகளையும் சோம்பேறிகளாக்க வேண்டாம். இந்திய முறை கழிப்பறைக்கு மாறுவோம்.
நன்றி : தி இந்து(தமிழ்) மற்றும் தினக்குரல்